செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் செயல்பட்டு வரும் துணை தபால் நிலையத்தில் இட நெருக்கடி மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
திருப்போரூரில் அமைந்துள்ள இந்த துணை தபால் நிலையம், சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு சேவை வழங்கி வருகிறது. இங்கு தபால் அலுவலர், உதவியாளர் மற்றும் தபால்காரர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் ஏராளமான பொதுமக்கள் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், புதிய சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், தபால் மற்றும் பார்சல் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால், தபால் நிலையம் மிகவும் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருவதால், அங்கு பொதுமக்கள் நிற்பதற்கே போதிய வசதி இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக அதிக நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் போது, பணிகள் முழுமையாக தேக்கமடைகின்றன.
இதுகுறித்து சமூக ஆர்வலர் செந்தில்வேல் கூறுகையில், “20 பேர் ஒரே நேரத்தில் தபால் நிலையத்திற்கு வந்தாலே பணிகள் நெரிசலாகிவிடுகின்றன. தபால் அனுப்புவதற்கான படிவங்களை பூர்த்தி செய்ய கூட இடமில்லை. இதனால் மக்கள் திரும்பிச் சென்று, கூட்டம் குறைந்த பிறகு மீண்டும் வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்றார்.
மேலும், தபால் நிலையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் பார்சல் விநியோகம் உள்ளிட்ட சேவைகளும் தாமதமாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக டெலிவரி ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பார்சல்கள் சரியான நேரத்தில் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.
எனவே, திருப்போரூர் தபால் நிலையத்தை விரிவுபடுத்தி, கூடுதல் ஊழியர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகமும் தபால் துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





