சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்பு குறித்த சமீபத்திய தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் அதிக நிதி ஒதுக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா உலக அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு மற்றும் நவீன ஆயுதக் கொள்முதலில் இந்தியா காட்டி வரும் அதீத ஆர்வம் இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா தனது ராணுவத்திற்காக சுமார் $92.1 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ஆயுத உற்பத்திகளை அதிகரித்ததே இந்தச் செலவின அதிகரிப்பிற்குக் காரணமாகும்.
உலக அளவில் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. இந்த டாப் 5 நாடுகளின் மொத்த ராணுவச் செலவினம் மட்டும் சுமார் $1.68 ட்ரில்லியன் ஆகும். இது ஒட்டுமொத்த உலக நாடுகளின் ராணுவச் செலவினத்தில் 58 சதவீதமாகும். மற்ற அனைத்து நாடுகளும் சேர்ந்து மீதமுள்ள 42 சதவீதத்தை மட்டுமே செலவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா தனது தற்காப்புத் திறனை மேம்படுத்தி வருவது, தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.





