தமிழக அரசியலில் இன்று ஒரு நெகிழ்ச்சியான மற்றும் நாகரிகமான நகர்வை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மேற்கொண்டுள்ளார். இன்று பிற்பகல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற இரண்டாம் நாளிலேயே, அரசியல் முதிர்ச்சியுடன் செயல்பட்டு வரும் முதல்வர் விஜய், மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று அண்ணா நகரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் மற்றும் வைகோவின் இல்லத்திற்கு வருகை தந்து ஒரு புதிய அரசியல் பண்பாட்டை விதைத்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தபோது, அவரை வரவேற்கச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வைகோவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, வீட்டின் வாசலுக்கே வந்து முதலமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து விஜய்க்குப் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மிகவும் உற்சாகமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் துரை வைகோ.
வீட்டிற்குள் சென்ற முதலமைச்சர் விஜய், மூத்த அரசியல் தலைவர் வைகோவைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். தமிழக அரசியலில் பல தசாப்தங்களாகப் போராட்டங்களைக் கண்ட வைகோவை, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக விஜய் சந்தித்தது ஒரு முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தமிழகத்தின் நலன், மொழிப்பற்று மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இருவரும் விரிவாக உரையாடியதாகத் தெரிகிறது.
சந்திப்பு முடிந்ததும், வைகோ தனது முதுமையையும் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் விஜய்யின் கைகளை இறுகப் பற்றியபடி கார் வரை வந்து அவரை வழியனுப்பி வைத்தார். ‘போராட்டக் குணம்’ கொண்ட ஒரு மூத்த தலைவர், வளர்ந்து வரும் ஒரு இளம் முதலமைச்சரின் கரங்களைப் பிடித்து அரவணைத்துச் சென்ற காட்சி அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த போதிலும், பதவியேற்ற கையோடு ஸ்டாலின் மற்றும் வைகோ போன்ற மூத்த தலைவர்களை விஜய் சந்திப்பது ஆரோக்கியமான போக்காகப் பார்க்கப்படுகிறது. “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் புதிய அரசியல்” எனத் தவெக தொண்டர்கள் இந்தச் சந்திப்பைச் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் புதிய விடியலில், முதிர்ச்சியான தலைவர்களின் வழிகாட்டுதலுடன் தனது பயணத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் நிலவி வந்த ‘தீண்டாமை’ அரசியல் கலாச்சாரம் மாறி, தற்போது நிலவி வரும் இந்த இணக்கமான சூழல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூத்த தலைவர்களின் ஆலோசனைகள் விஜய்யின் ஆட்சிக்கு எத்தகைய பலத்தைக் கொடுக்கும் என நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
