தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, மாநிலத்தின் முக்கியத் தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து வரும் முதல்வர் விஜய், இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ‘தம்பி’ என உரிமையுடன் சீமான் அவரை வரவேற்றது அரசியல் களத்தில் அனலைத் தணித்துள்ளது.
தமிழக அரசியலில் இன்று சந்திப்புகளின் நாளாக அமைந்துள்ளது. முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோரைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் இன்று மாலை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு வருகை தந்து ஒரு பெரும் ‘சர்ப்ரைஸ்’ (Surprise) அளித்தார்.
முதல்வர் விஜய் நீலாங்கரை இல்லத்திற்கு வருவதை அறிந்த சீமான், தனது வீட்டின் வாயிலுக்கே வந்து காத்திருந்தார். விஜய்யின் கார் வந்து நின்றதும், காரில் இருந்து இறங்கிய விஜய்யை ஓடிச் சென்று ஆரத்தழுவி (Hug) சீமான் வரவேற்றார். தேர்தல் களத்தில் தனித்து நின்று களம் கண்ட இவ்விரு தலைவர்களும், தற்போது காட்டிய இந்தத் தோழமை அங்கு கூடியிருந்த தவெக மற்றும் நாதக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
விஜய்யை வெறும் முதல்வராகப் பார்க்காமல், தனது தம்பியாகப் பாவித்து சீமான் செய்த உபசரிப்புகள் அனைவரையும் கவர்ந்தன. விஜய்யின் கைகளை இறுகப் பற்றியபடி, அவரை வீட்டிற்குள் சீமான் அழைத்துச் சென்றார். முதல்வர் விஜய், சீமானுக்குப் பொன்னாடை அணிவித்து தனது மரியாதையைச் செலுத்தினார். விஜய்க்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதுடன், அவருக்குப் பிடித்தமான சில புத்தகங்களையும் சீமான் பரிசாக வழங்கினார்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தமிழகத்தின் உரிமைகள், தமிழ் மொழி மற்றும் மண் சார்ந்த அரசியல் குறித்து இருவரும் சுமுகமாக உரையாடியதாகக் கூறப்படுகிறது. ஒரு முதல்வராக விஜய்யின் திட்டங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு இருக்குமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தேர்தல் காலத்தில் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டாலும், வெற்றிக்குப் பிறகு “அரசியல் வேறு, நட்பு வேறு” என்பதைத் தமிழகத்தின் இளம் தலைவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். சீமானின் இந்த ‘வார்ம் வெல்கம்’ (Warm Welcome) சமூக வலைதளங்களில் தவெக மற்றும் நாதக தொண்டர்களால் ‘அண்ணன் – தம்பி’ பாசமாக வைரலாக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல் சீமான் வரை முதல்வர் விஜய் மேற்கொண்டுள்ள இந்தத் தொடர் சந்திப்புகள், தமிழகத்தில் ஒரு இணக்கமான அரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
