மேடையில் முறுக்கி நின்ற வீரர்கள் – பரிசு கொடுத்து கவுரவித்த அமைச்சர்கள் ஆனந்த், சரத்குமார்…

0
5

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தென்னிந்திய அளவிலான பிரம்மாண்ட உடற்கட்டழகு மற்றும் பிசிக் சாம்பியன்ஷிப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. உடற்கட்டழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இந்த போட்டி விளையாட்டு வீரர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் முக்கிய மேடையாக அமைந்தது.

வண்டலூரில் நடைபெற்ற NPC Regional 2026 Bodybuilding & Physique Championship போட்டியை தமிழ்நாடு பிசிக் அலையன்ஸ் அமைப்பு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான IHFF Sheru Classic International போட்டிக்கான தகுதிச்சுற்றாக இந்த போட்டி அமைந்திருந்ததால், தொடக்கம் முதலே வீரர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.

இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் IFBB Pro நடுவரும் NPC South India தலைவருமான பொன்னம்பலவாணன் ஒருங்கிணைத்திருந்தார். விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மேலும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வீரர்களை ஊக்குவித்து வாழ்த்தினர்.

தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 125 வீரர்கள் 19 பிரிவுகளில் பங்கேற்று தங்களது கட்டுக்கோப்பான உடலமைப்பையும் திறமையையும் வெளிப்படுத்தினர். போட்டியின் இறுதியில், ஒட்டுமொத்த சாம்பியன்களுக்கான மதிப்புமிக்க “Champion of Champions” பட்டங்கள் அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டி உடற்கட்டழகு விளையாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் முக்கிய பங்காற்றுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.