Home Politics அறிவாலயத்தில் கலைந்த திராவிட மாடல் 2.0 கனவு! திமுக-வின் வீழ்ச்சிக்கு உளவுத்துறை தான் காரணமா?

அறிவாலயத்தில் கலைந்த திராவிட மாடல் 2.0 கனவு! திமுக-வின் வீழ்ச்சிக்கு உளவுத்துறை தான் காரணமா?

0

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் இதுவரை நிலவி வந்த அனைத்துக் கணக்குகளையும் தலைகீழாக மாற்றியுள்ளன. வெறும் 10 முதல் 20 இடங்களை மட்டுமே பிடிக்கும் எனக் கணிக்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், மிகக் குறுகிய காலத்தில் மாநிலத்தின் உளவுத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் திகைக்கும் வகையில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி காலை வரை, திமுக தலைமை 200-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தது. இதற்காக அறிவாலயத்தில் “திராவிட மாடல் 2.0” என்ற வாசகத்துடன் பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் இருந்தன. ஆனால், காலை 10 மணிக்கே தவெக-வின் அலை வீசுவதை உணர்ந்த நிர்வாகம், அவசர அவசரமாக அந்தத் திரைகளை அங்கிருந்து அகற்றியது. “மீண்டும் வெற்றி” என்ற முழக்கம், “தோல்விக்கான காரணம் என்ன?” என்ற தேடலாக மாறியது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மாநில உளவுத்துறை வழங்கிய தரவுகள் அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளன. தவெக அதிகபட்சமாக 20 இடங்களைப் பிடிக்கலாம் என்றே அறிக்கைகள் கூறின. ஸ்டாலினைச் சுற்றியிருந்த ஒரு சில ‘நிழல் அதிகார’ மையங்கள், தரைமட்ட நிலவரத்தை அவரிடம் கொண்டு செல்லாமல் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருந்தனர். குறிப்பாக, கொளத்தூர் தொகுதியிலேயே அவருக்கு எதிராக நிலவிய அதிருப்தியைக்கூட அதிகாரிகள் தெரிவிக்கத் தவறிவிட்டனர்.

தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் தவெக-வின் பலத்தைக் குறைவாக மதிப்பிட்டபோது, பிரதீப் குப்தாவின் Axis My India நிறுவனம் மட்டுமே தவெக 100 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று துணிச்சலாகக் கணித்தது. கள ஆய்வின் மூலம் மக்களின் அடிமனதில் இருந்த மாற்றத்தைச் சரியாகப் படம் பிடித்துக் காட்டிய அந்த நிறுவனத்தின் கணிப்பு, தற்போது அப்படியே பலித்துள்ளது.

“திராவிட மாடல்” என்ற பிம்பத்திற்குள் திமுக மூழ்கிக்கிடந்ததும், இளைஞர்களின் புதிய மாற்றத்திற்கான வேட்கையை உணரத் தவறியதுமே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 200 இடங்களை வென்று புதிய வரலாறு படைக்கக் காத்திருந்த திமுக-விற்கு, 107 இடங்களுடன் தவெக கொடுத்திருக்கும் இந்த அடி, கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version