Home Politics அதிக வாக்கு வித்தியாசத்தில் இபிஎஸ் வெற்றி; ஒரு வாக்கில் திமுக தோல்வி!

அதிக வாக்கு வித்தியாசத்தில் இபிஎஸ் வெற்றி; ஒரு வாக்கில் திமுக தோல்வி!

0

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 04) நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் பல்வேறு சாதனைகளுக்கும் அதிர்ச்சிகளுக்கும் சான்றாக அமைந்துள்ளன. குறிப்பாக எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈட்டிய வெற்றியும், திருப்பத்தூரில் திமுக சந்தித்த ஒரு வாக்கு வித்தியாசத் தோல்வியும் அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன.

தமிழ்நாடு முழுவதிலும் நடைபெற்ற போட்டிகளில், மாநிலத்திலேயே மிக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்.

எடப்பாடி தொகுதியில் களம் கண்ட இபிஎஸ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமாரை வீழ்த்தினார். பிரேம் குமாரை விட 98,110 வாக்குகள் கூடுதலாகப் பெற்று இபிஎஸ் தனது கோட்டையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிமுக ஒட்டுமொத்தமாக 46 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சியின் தலைவரே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வரலாற்றிலேயே மிகவும் அரிதான ஒரு நிகழ்வு திருப்பத்தூர் தொகுதியில் அரங்கேறியுள்ளது:

திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெரிய கருப்பன், மிகக் கடுமையானப் போட்டிக்கு மத்தியில் தோல்வியைத் தழுவினார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, பெரிய கருப்பனை வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இதுபோன்ற நூலிழை வெற்றிகள் அக்கட்சியின் எழுச்சியைப் பறைசாற்றுகின்றன. தமிழக அரசியலில் தவெக 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில், அதிமுக மற்றும் திமுக-வின் இந்த முக்கியத் தேர்தல் முடிவுகள் வரும் நாட்களில் புதிய அரசியல் காய்நகர்த்தல்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version