மாநில உரிமைகளை பாதிக்கும் சட்டம்; எதிர்த்து குரல் கொடுத்த விஜய்

0
9

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாரபட்சமானவை என தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026’ஐ நிறைவேற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் விஜய் வெளியிட்ட பதிவில், மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 543இலிருந்து 850 ஆக அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரில் இந்த மசோதா விரைவில் விவாதத்திற்கு வரவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது எனவும், ஆனால் அதனுடன் சேர்த்து கொண்டு வரப்பட்டுள்ள 131வது திருத்த மசோதா தென் மற்றும் வட மாநிலங்களுக்கிடையேயான பிரதிநிதித்துவ சமநிலையை பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால், மொழி, கலாசாரம், மாநில உரிமைகள் போன்ற முக்கிய விஷயங்களில் தென் மாநிலங்களின் குரல் பலவீனமாகும் என்றும் விஜய் பதிவிட்டுள்ளார். மேலும், ஒன்றிய அரசின் கொள்கைகளை நீண்ட காலமாக பின்பற்றி வரும் மாநிலங்களுக்கு ‘தண்டனை’ அளித்து, அதை பின்பற்றாத மாநிலங்களுக்கு ‘வெகுமதி’ அளிப்பது போன்ற நிலை உருவாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த மாற்றம் நிதி ஒதுக்கீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள விஜய், மாநிலங்களுக்கு கிடைக்கும் நிதி பங்கையும் பாதிக்கக்கூடும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.. ஏற்கனவே தமிழ்நாடு நிதி பகிர்வில் புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், இந்த மசோதா மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, தென் மாநிலங்களின் நலனை கருத்தில் கொண்டு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு தீங்கான இந்த ‘அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026’யை நிறைவேற்றும் முயற்சியை உடனடியாக கைவிட்டு, தற்போதைய நடைமுறையைத் தொடர வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த சட்டத்தை கொண்டு வர நினைத்தால் பழைய திமுகவை பார்க்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மறுவரையறை Delimitation சட்டம் என்பது மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் எல்லைகளையும் மாற்றும் செயல். இது நடைமுறைக்கு வந்தால், குறிப்பாக தென் மாநிலங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

இதனால், மக்கள் தொகை அதிகமாக வளர்ந்துள்ள வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஒப்பிடும்போது, அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது. இது மட்டுமின்றி, மொழி, கலாச்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் சட்டங்கள் இயற்றும்போது, தென் மாநிலங்களின் கருத்து போதுமான அளவில் பிரதிபலிக்காமல் போகலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.