செங்கல்பட்டில் புது பஸ் ஸ்டான்ட். பயணிகள் மகிழ்ச்சி.

0
7

செங்கல்பட்டு நகர மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த வெண்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் தினமும் நெரிசல், போக்குவரத்து சிக்கல், அடிப்படை வசதிகள் குறைபாடு போன்ற பிரச்சினைகள் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமையவுள்ள பஸ் ஸ்டாண்ட் மூலம் பயணிகள் வசதி மேம்படுவது மட்டுமல்லாமல், நகர போக்குவரத்தும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம் செங்கல்பட்டு நகர வளர்ச்சிக்கான முக்கிய கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) சார்பில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான பேருந்து நிலையத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2023 நவம்பர் 15ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம், இரத்த சுத்திகரிப்பு மையம், உள்விளையாட்டு அரங்கம், பூங்கா போன்றவை இடம்பெறுகிறது.

சுமார் 40 கோடி ரூபாய் செலவில், வெண்பாக்கம் அருகே 14 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த ‘கிரீன்ஃபீல்ட்’ பேருந்து முனையத்தில் நவீன வசதிகள், தனித்தனி பேருந்து நிறுத்தங்கள், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், பார்க்கிங் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் வசதி மேம்படுவதோடு, உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமாக இருக்கும்.

இந்த பேருந்து நிலையத்தில் 41 பேருந்துகள் நிற்பதற்கான நடைமேடைகள், 35 வணிக கடைகள் 325 இருசக்கர வாகன நிறுத்துமிடம், 55 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைய உள்ளது. செங்கல்பட்டிலிருந்து அண்டை மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்த உள்ள இந்த பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் சுமார் 4 கிமீ தொலைவிலேயே அமைந்துள்ளது.

சென்னை மாநகர மக்களுக்கு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் எப்படி ஒரு வரப்பிரசாதமோ அதுபோல செங்கபட்டு மக்களக்கு வெண்பாக்கம் பேருந்து நிலையமும் ஒரு வரபிரசாதம் என்றால் அது மிகையல்ல.