செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக, பூமியில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்ய ஏதுவான சூழல் உள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை குறைந்த விலையில் வாங்கி பயன்பெறலாம் என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில், தோட்டக்கலை பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, பழம் மற்றும் காய்கறி பயிர்களின் நடவு பொருட்களை, குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம் என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும், விவசாயிகள் மானிய விலையில் கத்தரி, மிளகாய் நாற்றுகள், வெண்டை விதைகள் உள்ளிட்ட காய்கறி செடிகளையும் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், விதைகள் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்தல் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க, அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி, பதிவு செய்து பயன் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





