திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் 2 மணி நேரம் CCTV நேரம் மாற்றம்! ஆட்சியர் நேரில் ஆய்வு!

0
4

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல்.ஆர்.ஜி அரசு பெண்கள் கலைக் கல்லூரி பாதுகாப்பு மையத்தில், சிசிடிவி கேமராக்களின் நேரம் 2 மணி நேரம் பின்னோக்கி ஓடிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ், இன்று காலை வாக்கு எண்ணும் மையத்தில் நேரடி ஆய்வில் ஈடுபட்டார்; எனினும், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ள நிலையில், இன்று அதிகாலை 4 மணி முதல் கேமராக்களில் பதிவான நேரம் திடீரென மாறி, 2 மணி நேரம் பின்னோக்கி ஓடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது குறித்துப் புகார் தெரிவித்துள்ள பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) முகவர்கள், “நேற்று இரவு 2 மணி நேரம் இணையதளத் தொடர்பு துண்டிக்கப்பட்டது; அப்போது கேமராக்களும் வேலை செய்யவில்லை. இது வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது,” எனக் குற்றம் சாட்டியுள்ளனர். கேமராக்கள் நிறுத்தப்படாமல் நேரம் தானாகப் பின்னோக்கிச் செல்ல வாய்ப்பில்லை என்றும், இது குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆய்விற்குப் பின் விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் மனிஷ், “நேற்று இரவு நான் நேரில் ஆய்வு செய்தபோது அனைத்தும் சரியாகவே இருந்தது; தற்போது ஏற்பட்டுள்ள குளறுபடி என்பது தொழில்நுட்பக் கோளாறு (Technical Issue) காரணமாக நேரம் மட்டும் 2 மணி நேரம் பின்னோக்கிச் சென்றுள்ளது. மற்றபடி இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு குறைபாடு ஏதுமில்லை,” எனத் தெரிவித்தார். இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் நாட்கள் உள்ள நிலையில், மிக முக்கியமான பாதுகாப்பு மையத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பக் கோளாறு அரசியல் கட்சியினரிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றித் தற்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.