Home செங்கல்பட்டு திருப்போரூர்: கூடுதல் குடிநீர் சுத்திகரிப்பு மையம்

திருப்போரூர்: கூடுதல் குடிநீர் சுத்திகரிப்பு மையம்

0

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலில், பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் இக்கோவிலில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் கிருத்திகை, சஷ்டி, விசாகம், பௌர்ணமி மற்றும் முக்கிய இந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. கந்த சஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட திருவிழாக்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுகின்றனர்.

கோவிலில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வருகை கணிசமாக அதிகரிக்கிறது.

தற்போது கோவில் வளாகத்தில் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் செயல்பட்டு வந்தாலும், அவை சிறிய அளவில் இருப்பதால் பக்தர்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலுடன் ஒரு பக்தர் தனது சொந்த செலவில் கோவிலின் கிழக்கு புற நுழைவாயில் பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

அதன்படி, 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்தால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version