புதூர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் 2வது நாளாக முற்றுகை போராட்டம்

0
4

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி, அப்பகுதி பெண்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருக்கரணை செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடைக்கு தினமும் ஏராளமானோர் வருவதால், குடிபோதையில் ஏற்படும் பிரச்சினைகள் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், புதூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் தாசில்தார் ராஜன், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால், உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, நேற்று காலை மீண்டும் பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள், புதூர் டாஸ்மாக் கடை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மதியம் 2 மணியளவில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.