வண்டலூர் ரயில் நிலையம் அருகே தொடரும் விபத்துகள்: நடைமேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

0
2

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில், ரயில் நிலையம் அருகே உள்ள ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தொடர்ந்து விபத்துகளை சந்தித்து வருவதால், சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வண்டலூர் ஊராட்சியில் 15 வார்டுகளில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வண்டலூர் ரயில் நிலையம் அருகே இருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாலாஜாபாத் சாலை தொடங்குவதால், இப்பகுதியில் தினமும் அதிகளவில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.

மேலும், ஜி.எஸ்.டி சாலையின் இருபுறங்களிலும் அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்களை பயன்படுத்துவதற்காக தினசரி 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சாலையை கடந்து செல்கின்றனர். ஆனால், அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் உயிர் ஆபத்தை எதிர்கொண்டு சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தவிர, தினசரி சிறிய அளவிலான பல விபத்துகளும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வண்டலூர் ரயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க நடைமேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க மாநில அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.