பள்ளிக்கரணை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்றதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 1 கிலோ 600 கிராம் கஞ்சாவுடன் 2 பேரை கைது செய்துள்ளனர்.
பவானி அம்மன் கோயில் தெரு மற்றும் ஏரிக்கரை பகுதி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 1.6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற ஹரி பிரசாத் (35) என்றும், மற்றொருவர் சைதாப்பேட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் (25) என்றும் தெரியவந்தது.
மேலும், ஹரி பிரசாத் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், நீண்ட நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டனர் என்பதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





