குடித்துவிட்டு கிணற்றில் குளித்தவர் பலி! பல்லாவரத்தில்…

0
8

சென்னை பல்லாவரம் அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 35 வயது நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் அருகே கீழ்க்கட்டளை சுப்பிரமணிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் நேற்று தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது அவருடன் சில குழந்தைகளும் குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் சுரேஷ், கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் மேலே வராததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு சுரேஷை பிணமாக மீட்டனர்.

பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரேஷின் திடீர் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கும் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.