செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் அமைந்துள்ள அகோபிலவல்லி தாயார் சமேத ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
பல்லவர் காலத்தைச் சேர்ந்த இந்த புகழ்பெற்ற குடைவரை கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம் இந்தாண்டும் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக உற்சவர் பிரகலாத வரதர் சூர்யபிரபை, சந்திரபிரபை, யாளிவாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி மங்கல வாத்தியங்கள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
இன்று அதிகாலை உற்சவர் பிரகலாத வரதர், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் காலை 6.30 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தர்கள் முழக்கமிட்டு பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர். தேரோட்டம் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தது.
இந்த தேரோட்ட விழாவில் சிங்கபெருமாள் கோவில் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கூடுவாஞ்சேரி சரக உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.





