பீலா வெங்கடேசனுக்குச் சொந்தமான தையூரில் உள்ள பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக, முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் அருகே தையூரில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் தங்குவது வழக்கம். இந்த வீடு மற்றும் நிலம் ஆகியவை ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன் பெயரில் வாங்கப்பட்டு உள்ளது. மேலும், இருவரது பெயரிலும் வீட்டின் மீது வங்கிக் கடனும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜேஷ் தாஸ் பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றார்.
ஆனால், தலைமறைவான ராஜேஸ்தாஸ், கடந்த 3 மாதங்களாக தையூர் பண்ணை வீட்டுக்கு செல்லவில்லை. தற்போது, பாலியல் வழக்கில் சரணடைவதில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் விலக்கு பெற்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி தையூர் பண்ணை வீட்டுக்கு வந்த ராஜேஷ் தாஸை, வீட்டுக்குள் நுழைய விடாமல் காவலாளி நர் பகதூர், கேட்டை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு, பீலா வெங்கடேசன் வீட்டுக்குள் யாரையும் விட வேண்டாம் எனச் சொல்லி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, தனது ஆதரவாளர்களை அழைத்த ராஜேஷ் தாஸ், காவலாளியை தாக்கிவிட்டு பண்ணை வீட்டில் அத்துமீறி தங்கியதாக தெரிகிறது. மேலும், அவருக்கு பாதுகாப்பாக 10க்கும் மேற்பட்ட அடியாட்களும் அந்த வீட்டில் தங்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பீலா வெங்கடேசன் ஆன்லைன் மூலமாக அளித்த புகாரின் பேரில், 5 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 நபர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், மேற்கண்ட வழக்கின் பேரில் ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
