செங்கல்பட்டில் மலேசிய முருகர் – இயற்கை சூழலில் அருள்பாலிக்கும் பாலதண்டாயுதபாணி

0
17

மலேசியா பத்துமலை முருகன் போன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள நடுபழனி பாலதண்டாயுதபாணி கோயில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த முத்துசாமி என்பவர்  வட இந்தியாவில் பல்வேறு கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாடு வந்த அவர் இப்போதைய செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை திருக்கோயிலில் 4 ஆண்டுகள் தவம் இருந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய முருகர்  ஒரு மலைப்பகுதியை சுட்டிக்காட்டி,  அங்கு தனக்கு கோயில் எழுப்புமாறு  ஆணையிட்டார்.

முருகன் சுட்டிக்காட்டிய மலையில்  சிறிய கொட்டகை அமைத்து,  முருகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முருகனின் அருளால் முருகரின் பெருமை  பல்வேறு ஊர்களுக்கு வர தொடங்கியது. ஊர் மக்களும் தாமாக முன்வந்து கோயிலுக்கு நன்கொடைகளை  வழங்கினர். கோயில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, இந்த சமயத்தில் காஞ்சிப் பெரியவர் ஒருமுறை வருகை தந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான், பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தர,  இக்கோயில் இருந்த இடத்திற்கு நடுப்பழனி என பெயரிட்டார். தொடர்ந்து இங்கு மரகத சிலையாக பாலதண்டாயுதபாணி சிலை வடிவமைக்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இம்மலையின் மேற்கு அடிவாரத்தில் 45 அடி உயர முருகன் சிலை, மலேசிய பத்துமலை முருகன் சிலையைப் போல அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. மேல்மருவத்தூரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில்  இக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வருபவர்கள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மேல்மருவத்தூர் வந்தடைந்து, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இடது புறத்தில் சாலை பயணம் செய்தால் 5 கிலோமீட்டர் தூரத்தில் இக்கோயிலை அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.