“புதிய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவா?”- தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு!

0
4

திமுக ஆட்சிக்காலத்தில் சிறிய சம்பவங்கள் நடந்தாலே அதனைப் பெரிதுபடுத்தி, அந்த ஆட்சி செயலற்ற நிலையில் இருந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கியவர்கள், தற்போது புதிய ஆட்சியில் ஒரு மாதத்திற்குள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள படுகொலைகள் மற்றும் பாலியல் குற்றங்களை ஏன் கண்டிக்காமல் மௌனம் காக்கிறார்கள் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின், அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அதிகரிக்கும் குற்றங்களும், மௌனம் காப்பவர்களும்: படுகொலைகளோ, பாலியல் குற்ற நிகழ்வுகளோ எந்த ஆட்சியில் நடந்தாலும் அதனை நாம் ஒருசேரக் கண்டிக்க வேண்டும். ஆனால், தற்போதைய புதிய ஆட்சியில் நடக்கும் கொடூரங்களை விடுத்துப் பல பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாகத் தலையிட்டுச் சட்டம் ஒழுங்கைச் சரி செய்ய வேண்டும்.

சிங்கப்பெண் படை எங்கே?: பெண்களின் பாதுகாப்பிற்காகச் ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’ அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாத காலத்தில் அந்தப் படையின் செயல்பாடுகள் என்னவாக இருக்கிறது, அதன் செயல் திட்டம் எந்த அளவில் உள்ளது என்ற விபரங்களை சம்பந்தப்பட்ட துறை அமைச்சகம் உடனடியாக வெளிப்படையாக வெளியிட வேண்டும். ஒரு பெண் காவல் அதிகாரிக்கே துன்பம் ஏற்படுகின்ற சூழலில், பல தரப்பினர் மௌனம் காப்பது ஏன் என்பதே நம்முடைய தார்மீகக் கேள்வி. இதில் முதல்வர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகதாது மற்றும் ஜூன் 12 தண்ணீர் திறப்பு: வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதற்காக அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் முத்தரப்புக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இதுவரை வேளாண்மைத் துறை அமைச்சர் இது தொடர்பாக எவ்வித முகாந்திர நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சிப் பாகுபாடின்றி ஒரே நிலைப்பாட்டில்தான் உறுதியாக இருக்கிறோம். அந்த அணையை எக்காரணம் கொண்டும் கர்நாடகா கட்ட அனுமதிக்கக் கூடாது; மீறி அணை கட்டப்பட்டால் தஞ்சை உள்ளிட்ட காவிரிப் படுகை மாவட்டங்கள் ஒட்டுமொத்தமாகப் பெரும் அளவில் பாதிக்கப்படும்.