பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனிநபர் தொழில் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினைக் கலைஞர்களுக்கான) கடன் மற்றும் கல்விக் கடன் உள்ளிட்ட திட்டங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டங்களின் கீழ், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ளவர்கள் திட்டம்-1 மற்றும் ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் திட்டம்-2 மூலம் பயன் பெறலாம். தனிநபர் தொழில் கடனாக அதிகபட்சம் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், இளங்கலை, முதுநிலை, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடனும் வழங்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, திட்ட அறிக்கை மற்றும் வங்கி கோரும் ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
