செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு மற்றும் பல்வேறு கல்வி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் பயிலும் மாணவர்களும் சேர தகுதியுடையவர்கள்.
விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு மற்றும் இலவச தங்கும் வசதி வழங்கப்படுகிறது. 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நான்கு இணை சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
விடுதிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தது 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.
விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பள்ளி விடுதிக்கான விண்ணப்பங்கள் 18.06.2026-க்குள்ளும், கல்லூரி விடுதிக்கான விண்ணப்பங்கள் 18.07.2026-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த ஈழத் தமிழர்களின் குழந்தைகளுக்காக ஒவ்வொரு விடுதியிலும் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
