Home செங்கல்பட்டு மறைமலைநகர்: நடைமேம்பாலத்தை தவிர்க்கும் பாதசாரிகள்!

மறைமலைநகர்: நடைமேம்பாலத்தை தவிர்க்கும் பாதசாரிகள்!

0

மறைமலை நகர் ஜி.எஸ்.டி. சாலையின் இருபுறங்களிலும் பேருந்து நிறுத்தங்கள் அமைந்துள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் சாலையை கடந்து செல்கின்றனர். மாநகர பேருந்துகள், தென் மாவட்ட பேருந்துகள் மற்றும் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் தொடர்ந்து இயங்கும் இந்த பகுதியில், ஜி.எஸ்.டி. சாலை அகலப்படுத்தப்பட்ட பிறகு பாதசாரிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.

குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க பெரும் அச்சத்துடன் இருந்தனர். இதையடுத்து, மின் தூக்கி வசதியுடன் கூடிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்த கோரிக்கையை தொடர்ந்து தற்போது மின் தூக்கி வசதியுடன் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜி.எஸ்.டி. சாலையின் மைய தடுப்பில் காலியாக உள்ள இடம் வழியாக பொதுமக்கள் நேரடியாக சாலையை கடந்து செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், வேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் இன்னும் நீடிக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “நடைமேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தாலும், மக்கள் அதை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. மைய தடுப்புகளில் கூடுதல் தடுப்புகள் அமைத்து, போலீசார் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

எனவே, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து உடனடி நடவடிக்கை எடுத்து, பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version