மாமல்லபுரம் நகராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர் திருவேங்கடத்திற்கு நகராட்சி நிர்வாகம் சிறப்பு மரியாதை செலுத்தி கவுரவித்தது.
மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புருஷம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (60), மாமல்லபுரம் பேரூராட்சியாக இருந்த காலத்தில் தூய்மைப் பணியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் மாமல்லபுரம் நகராட்சியாக உயர்த்தப்பட்ட பிறகும் தனது பணியை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு வந்தார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், நேற்று முன்தினம் தனது அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இதையொட்டி நகராட்சி அலுவலகத்தில் அவருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மாமல்லபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையர் சுரேந்திரன், திருப்போரூர் சுகாதார அலுவலர் ரகுபதி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு திருவேங்கடத்திற்கு சந்தனமாலை அணிவித்து, சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
மேலும், அவரது நீண்டகால சேவையையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் நகரின் தூய்மையை பாதுகாப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்வின் இறுதியில், நகராட்சி ஆணையர் சுரேந்திரன் தனது சொந்த வாகனத்தில் திருவேங்கடத்தை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று மரியாதை செலுத்தியதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நகராட்சி நிர்வாகத்தின் இந்த மனிதநேயமான நடவடிக்கை, அரசு ஊழியர்களின் சேவையை மதிக்கும் சிறந்த முன்னுதாரணமாக உள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்





