Home செங்கல்பட்டு 5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை – கூவத்தூர் மக்கள் கடும் அவதி

5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை – கூவத்தூர் மக்கள் கடும் அவதி

0

கூவத்தூர் அருகே கடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேகாத்தம்மன் கோவில் தெருவில் உள்ள மண் சாலை கடந்த 5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்ன குப்பம், பெரிய குப்பம், வேப்பஞ்சேரி மற்றும் துறந்தார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நகரங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக மேகாத்தம்மன் கோவில் தெரு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மண் சாலையாகவே நீண்டகாலமாக இருந்து வருவதால், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

மழைக்காலங்களில் சாலை களிமண்ணாக மாறி வழுக்கலாகிவிடுகிறது. கோடைக்காலங்களில் தூசி அதிகரித்து சுகாதார பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இந்த சாலையின் அகலம் 12 அடிக்கும் குறைவாக இருப்பதுடன், சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக மேலும் குறுகி வருகிறது. சாலை விரிவாக்கத்திற்காக சிலர் தங்களின் வீட்டு முன்பகுதியை வழங்க முன்வந்துள்ள போதிலும், சிலர் ஒத்துழைக்காததால் பணிகள் தாமதமாகி வருகின்றன.

கோவில் திருவிழா காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் நிலையில், இந்த குறுகிய மற்றும் மோசமான சாலை காரணமாக பெரும் நெரிசலும், விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version