தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக அனைத்து வகுப்புளுக்கும தேர்வுகள் முடிந்து மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை சில தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்திருந்தாலும் மற்ற மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சொந்தங்களை பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர்.
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்களும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரேசதங்களுக்கு செல்லத் தாயராகிவிட்டனர். இதன் காரணமாக வழக்கத்தை விட ரயில்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எனவே கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, சென்னை–திருநெல்வேலி இடையே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ஏற்பாடு, விடுமுறை காலத்தில் பயணிகளின் நெரிசலை குறைத்து, வசதியான பயணத்தை வழங்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த சிறப்பு ரயில்கள் ஏப்ரல் 16 முதல் 30 வரை குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும். அதன்படி, அதிவேக சிறப்பு ரயில் ஏப்ரல் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து ஏப்ரல் 17, 24 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.00 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். மேலும், மற்றொரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இது ஏப்ரல் 12, 19 மற்றும் 26 தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
மீண்டும், தாம்பரத்திலிருந்து ஏப்ரல் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.00 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல நிலையங்களில் நின்று சேவை வழங்கும்.
கோடை காலத்தில் அதிகரிக்கும் பயண தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் முக்கிய பங்காற்றும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
