Home செங்கல்பட்டு பெண்கள், விவசாயிகள் நலனை குறிவைத்து தவெக தேர்தல் அறிக்கை

பெண்கள், விவசாயிகள் நலனை குறிவைத்து தவெக தேர்தல் அறிக்கை

0

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் விஜய் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்த அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான பல முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை ஒரு விவசாயி பெற்றுக்கொண்டார். விஜய் அவருக்கு மரியாதை செலுத்தி, விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், திருக்குறளின் ‘அறம், பொருள், இன்பம்’ என்ற மூலக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நல்லாட்சியும், சமத்துவமும் இந்த அறிக்கையின் மையக் கருத்தாக இருக்கும் எனவும் கூறினார்.

பெண்களுக்கான முக்கிய வாக்குறுதிகளில், 60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், ஏழை மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டு சேலை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடனும் வழங்கப்படும்.

கல்வி மற்றும் இளைஞர் நலத் திட்டங்களாக, 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் வருடத்திற்கு ரூ.15,000 வழங்கப்படும். இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடன், ஏ.ஐ. அடிப்படையிலான இலவச போட்டித் தேர்வு பயிற்சி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. வேலைஇல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 மற்றும் டிப்ளமோ/ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மருத்துவ துறையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். இதில் புற்றுநோய், இதய சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவை அடங்கும். விவசாயிகளுக்காக 5 ஏக்கருக்கு குறைவான நிலம் கொண்டவர்களின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும், மற்றவர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிதி ஆதரவு போன்ற பல திட்டங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நலவாழ்வு நோக்கத்துடன் இந்த தேர்தல் அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version