செங்கல்பட்டு to கிளாம்பாக்கம்: எகிறும் நில விலை!

0
11

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் ஜிஎஸ்டி சாலை விரிவாக்கத்தால், செங்கல்பட்டு வரையிலான நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்து ரியல் எஸ்டேட் வர்த்தகம் உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னையின் எல்லைக்கோடுகள் இன்று வரைபடத்தைத் தாண்டிக் கிளாம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டை நோக்கி மிகவேகமாகப் பாய்ந்து வருகின்றன. ஒரு காலத்தில் வெறும் புதர்மண்டிக் கிடந்த நிலங்கள், இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்களமாகவும், ரியல் எஸ்டேட் உலகின் ஹாட் ஸ்பாட்டாகவும் உருவெடுத்துள்ளன. குறிப்பாக, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எகிறியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்கா வரை சிஎம்டிஏ (CMDA) அங்கீகாரம் பெற்ற நிலங்களின் ஆதிக்கம் நிலவும் நிலையில், அதைக் கடந்தவுடன் டிடிசிபி (DTCP) மனைகள் சந்தையில் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

ரியல் எஸ்டேட் வல்லுநர் ஒருவர் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் ஒரு சென்ட் நிலத்தின் விலை சுமார் 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் கணக்கிட்டால், ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடியைத் தாண்டிச் செல்வது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ஜிஎஸ்டி சாலையில் உள்ள வணிக ரீதியிலான இடங்கள் ஒரு கிரவுண்ட் 3 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை கைமாறுகின்றன. பொத்தேரி போன்ற பகுதிகளில் ஜோகோ (Zoho) போன்ற ஐடி ஜாம்பவான்களின் வருகையும், எஸ்ஆர்எம் (SRM) போன்ற கல்வி நிறுவனங்களின் பிரம்மாண்டமும் ஒரு சதுர அடியின் விலையை 15,000 முதல் 20,000 ரூபாய்க்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த அதிரடி விலையேற்றத்திற்கு பின்னால் வலுவான அடிப்படை வசதிகள் தான் காரணங்கள் என்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நவீனப்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் 200 அடி, 400 அடி வெளிவட்டச் சாலைகளின் இணைப்பு ஆகியவை இந்தப் பகுதியைச் சென்னையின் இதயமாக மாற்றியுள்ளன. வேலம்மாள் போன்ற சர்வதேசப் பள்ளிகள் மற்றும் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள் இந்தப் பகுதியை ஒரு ‘துணைக்கோள் நகரம்’ (Satellite City) என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளன. மேலும், அருகில் இருக்கும் சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகள் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதால், நடுத்தர வர்க்கத்தினர் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரும் செங்கல்பட்டு சாலையையே தங்களின் கனவு இல்லங்களின் இலக்காகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

தாம்பரம் மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) அசுர விரிவாக்கமும் இந்த நிலச் சந்தை எழுச்சிக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. கடந்த 2018-ல் தொடங்கப்பட்ட எல்லை விரிவாக்கப் பணிகள், 2023-ல் அதிகாரப்பூர்வமாக 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தப்பட்டது, அதாவது ஐந்து மடங்கு பரப்பளவு அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான நுழைவாயிலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலைக் கடந்து மக்கள் அமைதியான மற்றும் சகல வசதிகள் கொண்ட புறநகர்ப் பகுதிகளில் குடியேற ஆர்வம் காட்டுகின்றனர். இதன் விளைவாக, செங்கல்பட்டு சாலையில் ஒரு காலத்தில் நிலம் வாங்கிப் போட்டவர்கள் இன்று ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.