மீனாட்சி திருக்கல்யாணம்: ஏப்.19–22 முன்பதிவு

0
9

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் நடைபெறும் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண தரிசனத்திற்கான கட்டணச்சீட்டு முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சித்திரை திருவிழா ஏப்ரல் 18 முதல் 30 வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் திருக்கல்யாணம் ஏப்ரல் 28ஆம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணி வரை கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்பிலான கட்டணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். மேலும், கட்டணமில்லா தரிசனமும் “முதல் வருவோருக்கு முதல் வாய்ப்பு” அடிப்படையில் தெற்கு கோபுரம் வழியாக வழங்கப்படும்.

முன்பதிவு வசதி ஏப்ரல் 19 முதல் 22ஆம் தேதி இரவு 9 மணி வரை https://hrce.tn.gov.in மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளங்கள் வழியாக வழங்கப்படுகிறது.

ரூ.500 சீட்டுக்கு ஒருவர் அதிகபட்சம் 2 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ரூ.200 சீட்டுக்கு 3 சீட்டுகள் வரை பதிவு செய்யலாம். ஆனால் ஒரே நபர் இரு வகை சீட்டுகளையும் ஒன்றாக பதிவு செய்ய அனுமதி இல்லை. ஒவ்வொரு பதிவுக்கும் தனித்த மொபைல் எண் அவசியம். பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியாக வழங்கப்பட வேண்டும்.

மேலும், நேரடியாக முன்பதிவு செய்ய விரும்புவோருக்காக மதுரை எல்லீஸ்நகரில் உள்ள யாத்ரிநிவாஸ் தங்கும் விடுதியில் ஏப்ரல் 19 முதல் 22 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவிற்கு ஆதார் அட்டை போன்ற அடையாள ஆவணங்களுடன் வர வேண்டும்.

விண்ணப்பங்கள் அதிகமாக வந்தால், கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏப்ரல் 24 முதல் 27 வரை யாத்ரிநிவாஸ் மையத்தில் கட்டணம் செலுத்தி சீட்டுகளை பெற வேண்டும்.

திருக்கல்யாண நாள் அன்று, கட்டணச்சீட்டு பெற்றவர்கள் காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். ரூ.500 சீட்டுக்கானவர்கள் வடக்கு ராஜகோபுரம் வழியாகவும், ரூ.200 சீட்டுக்கானவர்கள் குறிப்பிட்ட பாதை வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் காலை 7 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து, ஒழுங்காக திருக்கல்யாணத்தை தரிசித்து அருள்பெறுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.