கேளம்பாக்கம் வங்கியில் தீ விபத்து: ஆவணங்கள் சேதம்

0
7

கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ள கோட்டக் மகிந்திரா வங்கி கிளையில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினிகள் சேதமடைந்தன.

நேற்று காலை சுமார் 8 மணியளவில் வங்கி கட்டிடத்தின் உள்ளிருந்து திடீரென கரும்புகை வெளியேறியதை அப்பகுதி மக்கள் கவனித்தனர். இதையடுத்து உடனடியாக கோவளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் வங்கிக்குள் இருந்த சில முக்கிய ஆவணங்கள், கணினிகள் மற்றும் மின்சாதனங்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் காரணமாக வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பகட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.