பருவமழை முன்னெச்சரிக்கை: காஞ்சிபுரத்தில் 21 மண்டல குழுக்கள் அமைக்க நடவடிக்கை

0
2

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளை வலுப்படுத்தும் வகையில் 11 துறைகளைச் சேர்ந்த 21 மண்டல குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ஆட்சியர் சினேகா பேசியபோது, இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய 72 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 3 பகுதிகள் மிகவும் அபாயகரமானவை, 21 பகுதிகள் அதிக பாதிப்பு ஏற்படக்கூடியவை, 26 பகுதிகள் நடுத்தர அபாயம் கொண்டவை மற்றும் 22 பகுதிகள் குறைந்த அபாயம் கொண்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசர மீட்புப் பணிகளை மேற்கொள்ள 11 துறைகளின் ஒருங்கிணைப்பில் 21 மண்டல குழுக்கள் குறுவட்ட அளவில் அமைக்கப்பட உள்ளன. மேலும், காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் வட்டார வாரியாக மீட்புக் குழுக்களும் செயல்பட உள்ளன.

மழை மற்றும் வெள்ள பாதிப்புகளின் போது போக்குவரத்து தடைகள் ஏற்படாமல் இருக்க தேவையான உபகரணங்கள், மனிதவளங்கள் மற்றும் மீட்பு வசதிகள் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, நீர்வள ஆதார அமைப்பு, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், காஞ்சிபுரம் சப்-கலெக்டர் ஆஷிக் அலி, ஸ்ரீபெரும்புதூர் சப்-கலெக்டர் நல்லசிவன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.