Home செங்கல்பட்டு கல்பட்டு கிராம ஏரி கால்வாயில் சேதமான தடுப்பணை: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கல்பட்டு கிராம ஏரி கால்வாயில் சேதமான தடுப்பணை: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

0

சித்தாமூர் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் ஏரி நீர்வரத்து கால்வாயில் சேதமடைந்துள்ள தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தடுப்பணை சேதமடைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயமும் குடிநீர் வசதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட கல்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 2013ஆம் ஆண்டு ஏரி நீர்வரத்து கால்வாயில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இதன் மூலம் கால்வாயில் தண்ணீர் தேங்கி, அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன், விவசாயமும் செழித்து வந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தடுப்பணை முழுமையாக சேதமடைந்தது. அதன் பின்னர் இதுவரை எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

தடுப்பணை சேதமடைந்ததால், கால்வாயில் வரும் நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து, விவசாய நிலங்கள் வறண்டு வருவதாகவும், குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த தடுப்பணையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version