தெலுங்கானாவில் புதிய அரசியல் திருப்பம்! தந்தை பெயரில் கட்சி தொடங்கினார் கவிதா!

0
6

தெலுங்கானா மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளும், முன்னாள் எம்பியுமான கவிதா கல்வகுன்ட்லா இன்று (சனிக்கிழமை) தனது புதிய அரசியல் கட்சியான ‘தெலுங்கானா ராஷ்டிர சேனா’ (TRS) கட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். ஹைதராபாத் அருகே உள்ள மேட்சல் (Medchal) பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் கட்சியின் பெயரையும் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி (TRS) என்ற பெயரில் தனது தந்தை தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி (BRS) எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில், கவிதா தனது புதிய கட்சிக்குத் தெலுங்கானா மக்களின் உணர்வோடு கலந்த ‘TRS’ என்ற அதே சுருக்கப் பெயரைக் கொண்டுள்ள ‘தெலுங்கானா ராஷ்டிர சேனா’ என்ற பெயரைச் சூட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பி.ஆர்.எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கவிதா, அதன் பிறகு ‘தெலுங்கானா ஜாக்ருதி’ என்ற அமைப்பின் மூலம் தீவிரமாக இயங்கி வந்தார்.

இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, மேட்சல் மாநாட்டுத் திடலுக்கு வந்த கவிதா, கட்சியின் கொள்கைகளை விளக்கினார். “தெலுங்கானா மாநிலத்தின் உண்மையான அபிலாஷைகளை பி.ஆர்.எஸ் கட்சி மறந்துவிட்டது; எங்களின் பழைய அடையாளமான டி.ஆர்.எஸ் (TRS) என்ற பெயருடனேயே நாங்கள் மீண்டும் மக்களின் போராட்டத்தை முன்னெடுப்போம்” என அவர் ஆவேசமாக முழங்கினார். குறிப்பாக, பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காகத் தனது கட்சி பாடுபடும் என்றும், வரும் 2029 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கே.சி.ஆர் குடும்பத்திலேயே ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, தெலுங்கானா மாநில அரசியலில் வரும் நாட்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.