கூடுவாஞ்சேரி புதிய நகராட்சி அலுவலகம் எப்போது திறப்பு? பொதுமக்கள் கேள்வி

0
6

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சிக்காக புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடம் கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி 85 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 30 வார்டுகள் மற்றும் 258 தெருக்களை கொண்ட இந்த நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஆண்டுதோறும் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருவதால், நகராட்சி சேவைகளுக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது ஜி.எஸ்.டி சாலை அருகே செயல்பட்டு வரும் நகராட்சி அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், புதிய அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு 2022ஆம் ஆண்டு புதிய அலுவலக கட்டடத்திற்காக ₹350 கோடி நிதி ஒதுக்கியது.

இதன்படி, நந்திவரம் – கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பின்புறம், வண்டலூர் தாலுகா அலுவலகம் அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான 64 சென்ட் நிலத்தில் புதிய அலுவலக கட்டுமான பணிகள் 2023 ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டன.

வாகன நிறுத்துமிடம், பொதுமக்கள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தரைத்தளம் மற்றும் மேல்தளத்துடன் கூடிய புதிய கட்டிடம் சுமார் 13,031 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்த நிலையில், கடந்த மார்ச் 4ஆம் தேதி முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

ஆனால், தற்போது வரை அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சந்தானம் கூறுகையில், “புதிய அலுவலகத்தில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. மேலும், ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததும் அடுத்த மாத இறுதிக்குள் புதிய அலுவலகம் செயல்பாட்டிற்கு வரும்” என்றார்.