தொகுதி மறுவரையறை மசோதா: கருப்புக்கொடி போராட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு

0
4

மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தில் முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில், ‘அரசியலமைப்பு 131-வது திருத்த மசோதா–2026’, ‘தொகுதி மறுவரையறை மசோதா–2026’ மற்றும் ‘யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா–2026’ ஆகிய மூன்று மசோதாக்களை முன்மொழிந்துள்ளது. இம்மசோதாக்கள் நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதற்கான பிரதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, தொகுதி மறுவரையறை காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனைகளை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைகளில், மசோதாவை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தொகுதி மறுவரையறை முயற்சியை தென் மாநிலங்களுக்கு எதிரான அநீதியாகக் குறிப்பிட்டார். மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை மாற்றுவது, தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இது தண்டனையாக அமையும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் வீடுகள் மற்றும் பொதுஇடங்களில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். மாநில உரிமைகள் மற்றும் அரசியல் சமநிலையை பாதுகாக்க பொதுமக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்