Home செங்கல்பட்டு குரோம்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

குரோம்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

0

சென்னை குரோம்பேட்டை கோதண்டம் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோதண்டம் நகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் பலர் நேற்று ஜிஎஸ்டி சாலையில் திடீரென திரண்டு வந்து, காலிக் குடங்களை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால் வீட்டு தேவைகளுக்கே தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதாக பெண்கள் தெரிவித்தனர். குறிப்பாக கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

சாலை மறியல் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version