செங்கல்பட்டு மாவட்டம் Cheyyur – Melmaruvathur மாநில நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் மண் குவியலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக மண் குவியலை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர்–மேல்மருவத்தூர் மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த சாலை வழியாக மதுராந்தகம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் சில தனியார் தொழிற்சாலைகளுக்கு ஜல்லிக்கற்கள், மணல் மற்றும் மண் போன்ற கட்டுமானப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, லாரிகளில் ஏற்றப்படும் மண் மற்றும் கட்டுமானப் பொருட்கள் தார்ப்பாய் கொண்டு மூடப்படாமல் கொண்டு செல்லப்படுவதால், பயணிக்கும் போது சாலைகளில் மண் சிதறி விழுகிறது.
தினந்தோறும் சாலையில் கொட்டப்படும் மண், தற்போது பெரிய குவியல்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலங்களில் இந்த மண் சேறாக மாறி சாலையில் வழுக்கல் ஏற்படுத்துவதால் விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் மண் குவியல்கள் தெளிவாக தெரியாததால் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சாலை ஓரங்களில் தேங்கியுள்ள மண் காரணமாக தூசி மாசும் அதிகரித்து, அருகில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி வாகன ஓட்டிகள் கூறுகையில், “லாரிகள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்வதால் சாலைகள் சேதமடைந்து வருகின்றன. மண் குவியலால் வாகனங்களை இயக்குவது சிரமமாக உள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சுத்தப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சாலை ஓரங்களில் தேங்கியுள்ள மண் குவியல்களை அகற்றுவதுடன், பாதுகாப்பு விதிகளை மீறும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





