செங்கல்பட்டு அருகே திம்மாவரம் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக வளாகத்தில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு மதியம் 2.30 மணி வரை நடைபெற்றது.
இந்த ஆய்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், செங்கல்பட்டு தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. தியாகராஜன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதன்மை மண்டல மேலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது அதிகாரிகள் அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். திம்மாவரத்தில் உள்ள நவீன அரிசி ஆலையில் தினமும் 100 டன் நெல் அரைக்க முடியும் திறன் இருந்தாலும், ஊழியர்கள் பற்றாக்குறையால் தற்போது 30 டன் மட்டுமே அரைக்கப்படுவதாக தெரிவித்தனர். முழுத் திறனில் செயல்பட தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு ஓய்வு அறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், மாவட்டத்தில் இயங்கி வரும் 171 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து தினமும் 153 லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்ட அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்தனர். கூடுதலாக லாரிகள் இயக்கப்பட்டால் நெல் தேக்கம் குறையும் என்றும் கூறப்பட்டது.
தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி நிலுவை தொகை இன்னும் வழங்கப்படாததாகவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதையடுத்து, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கிடங்குகள் அமைத்து, தரமான அரிசி ரேஷன் கடைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
இதற்கிடையில், வில்லியம்பாக்கம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஆய்வை அமைச்சர் மேற்கொள்ள இருந்த நிலையில், விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காத விவகாரம் குறித்து தகவல் கிடைத்ததால், அங்கு செல்லாமல் சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.





