மின்வெட்டு: செங்கல்பட்டில் அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை

0
7

செங்கல்பட்டு தொகுதியில் அடிக்கடி ஏற்பட்டுவரும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், அதுகுறித்து வந்த புகார்களை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு S. Thiagarajan தலைமை தாங்கினார். கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது பொதுமக்களிடம் இருந்து வந்த மின்வெட்டு தொடர்பான புகார்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக நேரடியாக தெரிவித்த குறைகளையும் எம்.எல்.ஏ தியாகராஜன் கேட்டறிந்தார்.

தொடர்ச்சியான மின்வெட்டு காரணமாக வீட்டு பயன்பாடு, சிறு தொழில்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குறிப்பாக இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்சாரம் தடைபடுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளிடம், மின்விநியோக குறைபாடுகளை உடனடியாக சரிசெய்து, பொதுமக்கள் சிரமமின்றி மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ வலியுறுத்தினார். மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் பழுதடைந்த மின்கேபிள்கள் தொடர்பாக விரைவான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க தனி கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.