செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பல அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், கூடுவாஞ்சேரி நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அம்பிகா 591 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அம்பிகா தமிழ், ஆங்கிலம், கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பாக மதிப்பெண்கள் பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது தந்தை தனியார் பள்ளி ஆசிரியராகவும், தாயார் இல்லத்தரசியாகவும் உள்ளனர். எதிர்காலத்தில் பட்டய கணக்காளர் (CA) ஆக வேண்டும் என்பது தனது கனவு என மாணவி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சிவதர்ஷினி 581 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். வரலாறு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக பதிவாகியுள்ளது.
மேலும் சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம் பள்ளி மாணவ, மாணவியரும் 100 சதவீத தேர்ச்சியுடன் சாதனை படைத்துள்ளனர். மாணவி வர்ஷா 574 மதிப்பெண்களுடன் முதலிடமும், இனியா மற்றும் மவிதா இரண்டாம் இடமும், தொல்காப்பியன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
மாணவர்களின் இந்த வெற்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
