செங்கல்பட்டில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டம்: ரோந்து அதிகரிக்க கோரிக்கை

0
5

செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் சுற்றித்திரிவதாகவும், திருட்டு மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் வேண்பாக்கம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், வல்லம், மேலமையூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சமீப காலமாக கஞ்சா விற்பனை, இருசக்கர வாகன திருட்டு மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

மேலமையூர் பகுதியில் கடந்த வாரம் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 24 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், சக்தி நகரில் மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சியும் நடந்ததாக கூறப்படுகிறது. இதனுடன், கடந்த 18-ஆம் தேதி இரவு முகமூடி அணிந்த சிலர் வீடுகளை நோட்டமிட்டு சுற்றித்திரிந்ததாகவும், அதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

வேண்பாக்கம் பகுதியில் அடிக்கடி பகல் நேர திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், திம்மாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை வெளிப்படையாக நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தபோதும், சில நேரங்களில் புகார்கள் ஏற்கப்படுவதில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், புகார் அளித்தவர்களுக்கு மர்ம நபர்கள் தொலைபேசியில் மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, கிராமப்புறங்களில் இரவு நேர காவல் ரோந்தை அதிகரித்து, திருட்டு மற்றும் போதைப்பொருள் குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.