Home செங்கல்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை காவலாளிக்குச் சரமாரி கத்திக்குத்து! போதை ஆசாமிகள் இருவர் கைது!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை காவலாளிக்குச் சரமாரி கத்திக்குத்து! போதை ஆசாமிகள் இருவர் கைது!

0

செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் முற்றிய நிலையில், அரசு மருத்துவமனை காவலாளியைக் கத்தியால் சரமாரியாகக் குத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்திய இரண்டு போதை ஆசாமிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரிந்து வரும் சுகுமார் (35), நேற்று இரவு திருக்கழுக்குன்றத்திலிருந்து பேருந்து மூலம் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த இருவர், மிதமிஞ்சிய மதுபோதையில் சுகுமாரை வம்புக்கு இழுத்துத் தகராறு செய்துள்ளனர்.

பேருந்து செங்கல்பட்டு ராட்டினக்கிணறு நிறுத்தத்திற்கு வந்தடைந்ததும், சுகுமார் அங்கிருந்து இறங்கியுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து இறங்கிய அந்தப் போதை ஆசாமிகள், சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுகுமாரைச் சரமாரியாகக் குத்தினர். கை, கழுத்து, கன்னம், மார்பு எனப் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்ததில் சுகுமார் நிலைகுலைந்து சரிந்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிய நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த சுகுமார் தனது மனைவி காயத்ரிக்குத் தகவல் அளித்தார். பதறியடித்து வந்த அவரது மனைவி, சுகுமாரை மீட்டு அவர் வேலை பார்க்கும் அதே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

வனப்பகுதியில் பதுங்கியிருந்தவர்கள் பிடிபட்டனர். சம்பவம் குறித்து சுகுமாரின் மனைவி காயத்ரி அளித்த புகாரின் பேரில், செங்கல்பட்டு நகரப் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், தாக்குதல் நடத்திய நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், திருப்போரூர் கூட்ரோடு வனப்பகுதியில் பதுங்கியிருந்த செங்கல்பட்டைச் சேர்ந்த விக்கி என்கிற ரகுநாத் (34) மற்றும் வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (40) ஆகிய இருவரை மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைச் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். கத்திக்குத்து காயங்களுடன் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகுமாருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் நடந்த இந்தத் துணிகரத் தாக்குதல் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொது இடங்களில் மதுபோதையில் வம்புக்கு இழுக்கும் ஆசாமிகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது வருத்தமளிக்கிறது. பேருந்துகள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் காவல்துறையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version