செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அரசு சிறப்பு பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தரமான மற்றும் சிறப்பு தேவைகளுக்கேற்ற கல்வியை குழந்தைகளுக்கு வழங்க தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறது.
தாம்பரம் சானடோரியம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான நடுநிலைப்பள்ளி மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிறுவனம் ஆகியவற்றில் தற்போது புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமைகளை வளர்த்து, அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக உருவாக்க இந்த பள்ளிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் சிறப்பு பயிற்சிகளை வழங்க விரும்பினால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. சிறப்பு ஆசிரியர்கள், தனிப்பட்ட கவனம், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கல்வி வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அரசு செவித்திறன் குறையுடையோருக்கான நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரை 9486325263 என்ற எண்ணிலும், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிறுவன திட்ட அலுவலரை 9582595778 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.





