Home செங்கல்பட்டு எமனாகும் செங்கல்பட்டு சாலைகள் – 4 மாதங்களில் 154 பேர் உயிரிழப்பு

எமனாகும் செங்கல்பட்டு சாலைகள் – 4 மாதங்களில் 154 பேர் உயிரிழப்பு

0

செங்கல்பட்டு மாவட்டத்தில் 136 நாட்களில் 545 விபத்துக்கள் நடைபெற்று, அதன் மூலம் 154 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பெருமளவு வேலைவாய்ப்பு உள்ளதால் தென் மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பிழைப்பிற்காக சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி தென்மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சென்னைக்கு செல்வதற்கு பிரதான நுழைவாயிலாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகியவை முக்கிய சாலையாக உள்ளது. 

இந்த சாலையில் அதிகளவு விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆத்தூர் சுங்கச்சாவடியில் இருந்து, பரனூர் சுங்கச்சாவடி வரை நாள்தோறும் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த விபத்துக்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் நடக்கின்றன.

இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. கொளத்தூர் சோதனை சாவடியில் தொடங்கி, விழுப்புரம் மாவட்ட எல்லைக்கு வரை கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கள் நடைபெறுவதும் அவற்றில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இசிஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலையில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த மூன்று விபத்துகளில் 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட மாவட்டத்தில், ஜனவரி 1 முதல் இன்று வரை அதாவது 136 நாட்களில், 545 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் பெரும்பாலான விபத்துக்கள் ஆத்தூர் சுங்கச்சாவடியில் இருந்து பரனூர் சுங்கச்சாவடிக்கு இடையிலான பகுதியில் நடைபெற்றுள்ளன. இந்த விபத்தில் 131 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்தம் நடைபெற்ற விபத்தில் 154 பேர் உயிரிழந்துள்ளனர். 612 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுபோக மறைமலை நகர் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதற்கு, பல இடங்களில் கனரக லாரிகள் சாலை ஓரங்களில் நிறுத்துவது, அந்த வாகனத்தில் பின்னால் மோதி விபத்து ஏற்படுவது அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில், கார்களால் ஏற்படும் விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.‌ அதேபோன்று அதிகாலை நேரங்களில் கவனம் சிதறும் நேரங்களில் இந்த விபத்து ஏற்படுகிறது. மேலும் பல இடங்களில் சாலைகள் குறுகலாகவும், சில இடங்களில் சாலை அகலமாகவும் இருப்பதால், இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version