செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான சைபர் கிரைம் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக வங்கி அதிகாரி, போலீஸ் அதிகாரி அல்லது அரசு ஊழியர் என போலியாக அறிமுகப்படுத்தி தொலைபேசி மற்றும் வீடியோ கால் மூலம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட விழிப்புணர்வு அறிவிப்பில், அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில மோசடி கும்பல்கள் வீடியோ கால் மூலம் பேசும் நபர்களின் குரல் மற்றும் வீடியோ பதிவுகளை சேமித்து வைத்து பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
மேலும், “உங்கள் குரலை பதிவு செய்யுங்கள்”, “OTP எண்ணை சொல்லுங்கள்”, “வங்கி கடவுச்சொல்லை பகிருங்கள்” போன்ற கோரிக்கைகள் வந்தால் உடனடியாக அந்த அழைப்பை துண்டிக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. எந்த சூழ்நிலையிலும் வங்கி விவரங்கள், OTP, ATM PIN அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்ளலாம் என்றும், www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றும் செங்கல்பட்டு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.





