திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இன்று தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மறைந்த மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மக்கள் பணிகளை முன்னிறுத்தி அவர் முன்னெடுத்து வரும் இந்தப் பிரச்சாரம், தொகுதியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
73-வது வட்டத்திற்குட்பட்ட பென்ஷனேர்ஸ் லேன், நியூ பெர்ரன்ஸ் ரோடு, ஷேக் மொய்தீன் சுபேதார் தெரு, கனகம்மாள் தெரு, அலெக்சாண்டர் தெரு மற்றும் பில்வேடர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
ஒவ்வொரு தெருவிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், “பல ஆண்டுகளாக மக்கள் அடிப்படை வசதிகளின்றி அதே இடத்தில் உண்ணவும், உறங்கவும் வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இந்த நிலையை மாற்றிக் கண்ணியமான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதே எனது முதல் இலக்கு” என உறுதி அளித்தார்.
பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தேர்தல் களத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
தேர்தல் களம் எங்களுக்குச் சாதகமாக உள்ளது, மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எங்களின் இந்த எழுச்சியைக் கண்டு பயந்துபோயுள்ள எதிர்க்கட்சியினர், தொகுதியில் பணத்தையும் கூப்பன்களையும் வாரி வழங்கி வருவதாகத் தகவல்கள் வருகின்றன. இது அவர்களின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. மக்கள் பணத்திற்கு விலை போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தொகுதியின் தீராத பிரச்சனைகளாக இருக்கும் குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்துத் தனது திட்டங்களை அவர் விளக்கினார். தினசரி குடிநீர் கிடைக்காத அவலத்தைப் போக்கக் குழாய் இணைப்புகளை மேம்படுத்துவதோடு, உடனடியாக லாரிகள் மூலம் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பட்டா இல்லாமை, கழிவுநீர் மேலாண்மை மற்றும் கழிப்பறை வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்வேன்.
இளைஞர்களிடையே பெருகி வரும் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு மையங்கள் அமைக்கப்படும்.
தனது அரசியல் அனுபவம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “அரசியல் எனக்குப் புதியதாக இருக்கலாம், ஆனால் எனது கணவர் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து நீண்டகாலமாகச் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். கல்விதான் சமூக மாற்றத்திற்கான ஆயுதம் என அவர் எப்போதும் கூறுவார். அதே பாதையில் நின்று, திரு.வி.க நகர் தொகுதி மக்களுக்குத் தரமான கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
porkodi-armstrong-tvk-nagar-campaign-complaint





