Home ஆன்மிகம் சீதைக்காக நெய்யப்பட்ட வாழை நார் சேலை – செங்கல்பட்டில் இருந்து அயோத்திக்கு…

சீதைக்காக நெய்யப்பட்ட வாழை நார் சேலை – செங்கல்பட்டில் இருந்து அயோத்திக்கு…

0

அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கோயிலில் உள்ள சீதாதேவி சிலைக்கு பிரத்தியேகமாக வாழை நார் மூலம் தயாரிக்கப்பட்ட சேலை செங்கல்பட்டில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனகாபுத்தூரில் இயற்கைப் பொருள்கள் கொண்டு ஆடைகள் நெசவு செய்யப்படுகிறது. கழிவாகக் கருதி ஒதுக்கும் பொருட்களில் இருந்து நாரெடுத்து காய்கறி, பழங்கள் பட்டைகளில் வண்ணங்கள் எடுத்து சேலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அனகாபுத்தூரில் கடந்த 12 வருடங்களாக இயற்கை நார் நெசவுக் குழுமும் வாழை, மூங்கில், கற்றாழை, பைனாப்பிள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கை நார்களின் இழைகளைக் கொண்டு பலவண்ண சேலைகளைத் தயாரிக்கும் நெசவுத் தொழிலில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலைகளுக்கான வண்ணங்களை உருவாக்குவதற்கு வேப்பிலை, மஞ்சள், சந்தனம், சுண்ணாம்பு, கரி, பழங்கள், காய்கறிகள், பட்டைகளில் இருந்து வண்ணங்கள் உருவாக்கி அதனை நார்களில் ஊறவைத்துப் பல வண்ணங்களில் சேலைகளை நெய்து வருகின்றனர். இந்த சேலைகளில் எந்த வகை ரசாயனமும் சேர்க்கப்படாததால் இது உடம்புக்கு மிகவும் குளிர்ச்சியையும் தருகின்றன. அது மட்டுமல்லாமல் மூலிகை நார்களில் நெய்கிற சேலைகள் தோல் நோய்களையும் குணப்படுத்தும் என்கின்றனர்.

இந்த நிலையில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இதற்காக நாடு முழுவதும் இருந்து சிறப்புப் பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர். அந்த வகையில் அனகாபுத்தூரிலிருந்து இயற்கை நார் நெசவாளர்கள் குழுமத்தின் சார்பில் ராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சீதாதேவி சிலைக்கு முழுக்க முழுக்க இயற்கையால் உருவாக்கப்பட்ட 20 அடி நீளத்தில், நான்கடி அகலத்தில் வாழை நார் சேலை தயாரிக்கப்பட்டுள்ளது .

அந்த பிரத்தியேக இயற்கை வாழை நார் சேலையில் அயோத்தி ராமர் கோயில் மற்றும் ராமர் அம்பு விடுவது போன்ற படத்தைப் பொறித்து உருவாக்கி அதனைக் குருக்கள் மூலம் சென்னையில் இருந்து விமான மூலம் அயோத்தி கோயிலுக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version