டெல்லியில் நடைபெறவுள்ள ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஆறு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்திய வாள்வீச்சு கூட்டமைப்பு சார்பில் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் ஜூன் 18 முதல் 24 வரை நடைபெற உள்ளது. நாட்டில் முதல் முறையாக நடைபெறும் இந்த தொடரில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
சேபர், பாயில் மற்றும் எப்பி ஆகிய மூன்று பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் பிரிவில், சர்வதேச அரங்கில் இந்தியாவின் முன்னணி வாள்வீச்சு வீராங்கனையாக விளங்கும் சென்னை வீராங்கனை பவானி தேவி சேபர் பிரிவில் களமிறங்குகிறார். மேலும், சென்னை வீராங்கனை ஜாய்ஷி அஷிதா பாயில் பிரிவிலும், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெபர்லி சேபர் பிரிவிலும் பங்கேற்க உள்ளனர்.
ஆண்கள் பிரிவில், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜோசப் மற்றும் ஷெர்ஜின் எப்பி பிரிவிலும், ஜிஷோ நிதி சேபர் பிரிவிலும் இந்திய அணிக்காக போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.





