அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா: 3 தொகுதிகள் காலி… அரசியலில் பரபரப்பு

0
7

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் 3 பேர் தவெக-வில் இணைந்துள்ளனர். மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இதுவரை 3 பேரின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையடுத்து, மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய மூன்று தொகுதிகளும் காலியானதாக சட்டமன்ற செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 5 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியும், சி.வி. சண்முகம் – எஸ்.பி. வேலுமணி அணியும் தனித்தனியாக செயல்பட்டு வந்த நிலையில், கட்சிக்குள் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக விஜய் அரசுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த மூன்று எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த சூழலில், ராஜினாமா செய்த உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் அதிமுகவின் பலம் சட்டசபையில் மேலும் குறைந்துள்ளது. மேலும் வேலுமணி அணியில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகுவது அக்கட்சியில் புதிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். அதை ஆய்வு செய்து பரிசீலிப்பதாக ஜேசிடி பிரபாகரர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பு உருவாகும் சூழல் நிலவுகிறது.