“திமுக ஆட்சியில் வளர்ச்சி இல்லை, வேலைவாய்ப்பு பறிப்பு! – அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் சாடல்!

0
6

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் இரத்தினமங்கலம் பகுதியில் நடைபெற்ற அதிமுக கிளை மற்றும் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், திமுக அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து உரையாற்றினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், செங்கல்பட்டு தொகுதியில் அதிமுகவின் இந்தத் தீவிர பிரசாரம் மற்ற கட்சிகளிடையே அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள்: “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. தெருவுக்குத் தெரு கஞ்சா மற்றும் போதை ஊசிகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது” எனக் கஜேந்திரன் சாடினார்.

குடும்பத் தலைவிகளுக்கு ₹1000 தருவதாகக் கூறிவிட்டு, ஒரு கோடி பேருக்கு மட்டும் வழங்கிவிட்டு மற்றவர்களை ‘தகுதி இல்லாதவர்கள்’ என ஒதுக்கிவிட்டனர் என்று அவர் குற்றம் சாட்டினார். பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் மற்றும் வரி உயர்வு ஆகியவற்றால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

செங்கல்பட்டு தொகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக வேட்பாளர் கஜேந்திரன் வருத்தம் தெரிவித்தார். இங்கு ஏராளமான நிறுவனங்கள் இருந்தும், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை.

நான் வெற்றி பெற்றால், தொகுதி முழுவதும் மாதம் இருமுறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவேன். இளைஞர்களுக்காகத் தனித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்களை அமைத்துத் தருவேன் என அவர் வாக்குறுதி அளித்தார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க உழைக்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.